“நிதிக் குழுக்களின் நடவடிக்கைகளால் தமிழகத்துக்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு” - அமைச்சர் தங்கம் தென்னரசு

post image

சென்னை:  “சிறப்பாக செயல்படும் மாநிலங்களை கட்டுப்படுத்தும் அணுகுமுறையை நிதிக்குழுக்கள் மாற்றியமைக்க வேண்டும், அனைத்து மாநிலங்களையும் பாதுகாக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும்,” என்று மாநாட்டில் தமிழக  நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், 16-வது நிதிக்குழு தொடர்பான மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் இன்று (செப்.12) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: “இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது.

சமுதாய மேம்பாடு, கல்வி, சுகாதாரம், விவசாயம், சமூக நலன் உள்ளிட்ட பொதுமக்கள் சேவைகள் போன்ற பல்வேறு பொறுப்புகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டாலும், வருவாய் உருவாக்கம் சார்ந்த பெரும்பான்மை அதிகாரங்களை மத்திய அரசே வைத்துள்ளது. இந்த சூழலில்தான், அடுத்தடுத்து அமைக்கப்பட்ட நிதிக்குழுக்கள் வருவாய் பங்கீட்டை மத்திய, மாநில அரசுகளிடையே அதிகரிக்க முயற்சி செய்தன. அந்த வகையில், கடந்த 15-வது நிதிக்குழுவானது 41 சதவீத பகிர்வை பரிந்துரைத்தது. ஆனால், முதல் நான்கு ஆண்டுகளில் மொத்த வரி வருவாய் 31.42 சதவீதம் மட்டுமே பகிரப்பட்டது.