சென்னை: “அரசு ஊழியர்களின் குறைகளை களையும் வகையில், துறையின் செயலர்கள், துறைத் தலைவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசவேண்டும்,” என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட துறைகளின் செயலர்கள் உள்ளிட்டோருக்கு தலைமைச்செயலர் நா.ருமுகானந்தம் இன்று (அக்.18) அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு அதே துறையால் வெளியிடப்பட்ட கடிதத்தில் மீண்டும் இந்த அரசாணை நினைவூட்டப்பட்டது.
இந்நிலையில், தற்போது அனைத்துத் துறை செயலர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் 2001-ம் ஆண்டு அரசாணைப்படி, அரசு ஊழியர்களின் குறைகளை பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நிவர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.அதன்படி, துறைத் தலைவர்கள் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறையும், துறைத் தலைவர்கள் ஆண்டுக்கு இரு முறையும் அழைத்து பேச வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும்.
துறைத் தலைவர் அல்லது துறை செயலர்கள் அவர்கள் அளவில் தீர்க்க வேண்டிய விவகாரங்களை பேசி தீர்வு காண வேண்டும். துறைக்குள் முக்கியத்துவம் வாய்ந்த குறைகள் மட்டுமே துறைத்தலைவர், செயலர்கள் முன் விவாதிக்கப்பட வேண்டும். விதிகளை தளர்த்துதல், சம்பள விகிதத்தை மாற்றியமைத்தல், பணியிடங்கள் உருவாக்குதல் போன்ற அரசின் கொள்கை முடிவுகள் குறித்தவை தொடர்பாக விவாதிக்கப்படக்கூடாது. இந்த விவகாரங்கள் வேறு கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டியவை.
.
கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து, கூட்டம் நடப்பதற்கு 15 நாட்கள் முன்னதாகவே அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கத்தில் இருந்து 2 பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்பதை துறைத்தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். பிரதிநிதிகளுக்கு கூட்டம் நடைபெறும் நாளன்று பணி நாளாக கருதப்படும். தமிழ்நாடு குடிமைப்பணிகள் கூட்டு மன்ற கூட்டம் மற்றும், மாவட்ட குடிமைப்பணிகள் கூட்டுமன்ற கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் துறைச் செயலர்கள், துறைத்தலைவர்கள் கூட்டங்களில் முன்வைக்கக்கூடாது.
துறை செயலர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களின் 2-வது வாரத்திலும், துணைத்தலைவர்கள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களின் இரண்டாம் வாரங்களிலும் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை துறைத்தலைவர்கள் துறை செயலர்களுக்கும், மனித வள மேலாண்மைத்துறைக்கும் அனுப்ப வேண்டும். துறை செயலர்கள் அந்த அறிக்கைகளை ஆய்வு செய்து, தலைமைச்செயலருக்கு அனுப்ப வேண்டும். செயலர்கள் நடத்தும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை, தலைமைச்செயலருக்கும், மனிதவள மேலாண்மைத்துறைக்கும் அனுப்ப வேண்டும்.
மனிதவள மேலாண்மைத்துறை உரிய நேரங்களில் கூட்டம் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமைச்செயலரை சமீபத்தில் சந்தித்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள், மாநில குடிமைப்பணிகள் கூட்டுமன்ற கூட்டத்தை நடத்த வலியறுத்தி மனு அளித்திருந்தனர். இந்நிலையில், அனைத்து துறைகளிலும் இதுபோன்ற குறைதீர் கூட்டங்களை நடத்த தலைமைச்செயலர் அறிவுறுத்தியிருப்பதற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் நன்றி தெரிவித்துள்ளது